திங்கள், 10 ஆகஸ்ட், 2009

மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் அருகே கூட்டுறவு வங்கி ஒன்றின் செயலாளர் ரூ 52 கோடி மோசடி செய்த வழக்கில், ஜப்தி செய்யச் சென்ற அதிகாரிகளை அரிவாளால் தாக்க முயற்சித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை அருகே திருநகர் ஜோசப் நகரில் வசித்து வருபவர் மாயன். இவருக்கு 50 வயதாகிறது. இவர் கடந்த 1991 முதல் 1996-ம் ஆண்டு வரை மதுரை நகர கூட்டுறவு வங்கி செயலாளராக இருந்து வந்தார். அப்போது வங்கி வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்த பணத்தில் ரூ.52 கோடியை முறைகேடு செய்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக மாயன் உள்பட 35 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்தப் பிரச்சினை காரணமாக வாடிக்கையாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முடியாமல் நெருக்கடி ஏற்பட்டது. இதனை அடுத்து கூட்டுறவு வங்கி கலைக்கப்பட்டது. அதன்பின் இன்சூரன்சாக ரூ.32 கோடி பெறப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதில் ரூ.1 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு பணம் வழங்கப்படாத நிலை இருந்து வருகிறது. ஆகவே வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பணம் வேண்டும் என்று அதிகாரிகளை வற்புறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை துணை பதிவாளர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட தண்டல் வழக்கில் கடந்த 2008-ம் ஆண்டு மே மாதம் 30-ந் தேதி மாயனின் அசையும் சொத்தை ஜப்தி செய்ய கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதனை அடுத்து நேற்று காலையில் வங்கி கலைத்தல் அலுவலர் மற்றும் துணை பதிவாளர் அருள் அரசன், குற்றவியல் கூட்டுறவு சார்பதிவாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் தலைமையில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் திருநகர் ஜோசப் நகரில் உள்ள மாயன் வீட்டுக்கு சென்றனர்.
அப்போது அவர் தன் வீட்டின் மேல் மாடியில் வேறு நபர் வாடகைக்கு இருப்பதாகவும் எனவே அங்கிருக்கும் பொருட்களை ஜப்தி செய்யக் கூடாது எனவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனை அதிகாரிகள் ஏற்காததால் அங்கு அவர்களிடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாயன் அரிவாளால் அதிகாரிகளைத் தாக்க முற்பட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அவர் பைக்கில் தப்பியோடியுள்ளார்.
ஜப்திக்குச் சென்ற அதிகாரிகளைக் கொலை செய்ய முயற்சித்ததாகவும் அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்தமைக்காகவும் மேலும் இரு வழக்குகள் மாயன் மீது பதிவு செய்யப்பட்டு, மாயனைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.